Friday, May 27, 2005

WANTED --- கருத்துச் சுதந்திரம்

ஜனநாயக நாட்டிலும் கருத்துச் சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், இவ்விடயத்தில் பொதுவாக நம் சமூகத்தில் வளர்ச்சி இல்லை என்பது நிதர்சனம். சகிப்புத்தன்மை, மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்வதில் நேர்மை, ஒரு சாராரின் நம்பிக்கைக்கு புறம்பானவற்றையும் அனுமதிக்கும் பெருந்தன்மை போன்ற பண்புகளை காண்பது அரிதாகி வருகிறது.

தமக்கு பிடிக்காதவற்றை எதிர்த்து வன்முறையிலும் அராஜகத்திலும் ஈடுபடுவதென்பது நடைமுறையில் உள்ளது. அரசியல் ஆதாயத்துக்காகவும் ஊடக ஒளியில் இருப்பதற்காகவும் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவரின் சாகசங்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் சொல்லி மாளாது.

சமீபத்தில் திரைக்கு வந்த "ஜோ போலே ஸோ நிஹால்" என்ற ஹிந்தி திரைப்படத்திற்கு, சீக்கிய மதத்திற்கும், அதன் கோட்பாடுகளுக்கும் எதிரானது என்று கூறி, SGPC (Shironmani Gurdwara Prabandh Committee) பயங்கர எதிர்ப்பைத் தெரிவித்தது. அப்படத்தை (உலகெங்கும்!) திரையிட தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூக்குரலிட்டது.

இதில் கொடுமை என்னவென்றால், தணிக்கைக் குழு ஒரு முறைக்கு இரு முறை இப்படத்தை ஆய்வு செய்து திரையிட உகந்தது என்று கூறிய பின் இத்தனை ஆர்ப்பாட்டமும் !!! மேலும், சாமானிய சீக்கியர்களிடமிருந்து, SGPC-க்கோ, இன்னபிற சீக்கிய அடிப்படைவாதிகளுக்கோ, பெரும் ஆதரவு ஏதும் கிட்டவில்லை.

இப்படம் திரையிடப்பட்டவுடன், லூதியானா, ஜலந்தர், அமிர்தசரசு ஆகிய இடங்களில் வன்முறை வெடித்தது. அதன் தொடர்ச்சியாக தில்லியில் படம் திரையிடப்பட்ட இரு அரங்குகளில் குண்டு வெடித்தது. SGPC செய்த கலாட்டாவை சாதகமாக எடுத்துக் கொண்டு சில விஷமிகள் செய்த காரியம் இது என்று கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும், SGPC நீதிமன்றம் சென்று படத்தைத் திரையிட தடை வாங்குவதை விட, மிரட்டி உருட்டி பணிய வைப்பதே சிறந்த வழி என்று நம்பியது ! அது போலவே நடந்தும் விட்டதும் !!!

இம்மாதிரி போக்கு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதற்கு முன்னும் இது போல் (சகிப்புத்தன்மை துளியும் இல்லாமல்) எதிர்ப்புகள், வன்முறையின் துணையோடு எழுந்துள்ளன. அல்லது, பதவியில் இருப்பவர்கள் கருத்து சுதந்திரத்தை நசுக்கத் தலைப்படுகிறார்கள்.

1. மகாராஷ்டிர மாநிலத்தில், சத்ரபதி சிவாஜியை இழிவுபடுத்தியதாகக் கூறி, ஒரு புராதன நூலகமே (அருங்காட்சியகமா?) தீக்கிரையாக்கப்பட்டு, பல விலை மதிப்பற்ற பொருட்கள் அழிந்து போயின.

2. ஓரினச் சேர்க்கை குறித்துப் பேசுவதாகக் கூறி, "·பயர்" திரைப்படத்திற்கு சிவசேனா காட்டிய அராஜக எதிர்ப்பு காரணமாக, அத்திரைப்படம் பெரும்பிரச்சினைக்கு உள்ளானது.

3. "SATANIC VERSES" புத்தகத்துக்கு, முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து கிளம்பிய பயங்கர எதிர்ப்பால், இந்திய அரசாங்கம் அப்புத்தகத்திற்கு தடை விதித்தது.

4. நமது "தமிழ் பாதுகாவலர்கள்" திரைப்படங்களுக்கு தமிழில் தான் தலைப்பு வைக்க வேண்டும் என்று கூறி, அதன் தொடர்ச்சியாக பல வேண்டாத நிகழ்வுகளும், கூத்துக்களும் நடந்தேறின.

5. சினிமா மற்றும் தொலைக்காட்சியில் மது அருந்துவதை / சிகரெட் பிடிப்பதை காட்டுவதை தடை செய்யும் அரசாணை இயற்றப் போவதாக அமைச்சர் அன்புமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இது தேவையில்லாதது. இதனால் பயனொன்றும் இல்லை. இது எப்படி இருக்கிறதென்றால், குற்றாலத்தில் மழை பெய்தால், கூடுவாஞ்சேரியில் தண்ணீர் கஷ்டம் தீர்ந்து விடும் என்பது போலத் தான். "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று பட்டுக்கோட்டையார் பாடியது தான் நினைவுக்கு வருகிறது !!!

அடுத்து, நம் மக்களிடம் காணப்படும் மற்றொரு (தனித்தன்மையான!) இயல்பு, இறந்து போன மற்றும் வாழ்கின்ற அரசியல் தலைவர்களை கடவுளர்களாக்கி விடுவது. ஒவ்வொரு தலைவருக்கும் நிறைய பக்தகோடிகள் இருக்கிறார்கள். இத்தலைவர்கள் (பெயர் வேண்டாம், சச்சரவு தான் மிஞ்சும்!) பொதுவாக விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராகவே கருதப்படுகிறார்கள் ! ஆனால், அமெரிக்காவில், சக்தி வாய்ந்தவராக கருதப்படும் ஜார்ஜ் புஷ்ஷையே மோசமாக நையாண்டி செய்து திரைப்படமும், பாடலும் கார்ட்டூனும் வந்த வண்ணம் உள்ளன. "ஜனநாயக" இந்தியாவில் இதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

8 மறுமொழிகள்:

மாயவரத்தான் said...

//தமக்கு பிடிக்காதவற்றை எதிர்த்து வன்முறையிலும் அராஜகத்திலும் ஈடுபடுவதென்பது நடைமுறையில் உள்ளது. //
வலைப்பூக்களிலே தானே சொல்றீங்க அண்ணாச்சி?!

ஏஜண்ட் NJ said...

//...அமெரிக்காவில், சக்தி வாய்ந்தவராக கருதப்படும் ஜார்ஜ் புஷ்ஷையே மோசமாக நையாண்டி செய்து திரைப்படமும், பாடலும் கார்ட்டூனும் வந்த வண்ணம் உள்ளன. "ஜனநாயக" இந்தியாவில் இதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.//

ஏன் முடியாது! பாலா அவர்களே,
ஜார்ஜ் புஷ்ஷை மோசமாக நையாண்டி செய்து திரைப்படமும், பாடலும் கார்ட்டூனும் போட ஏன் முடியாது இந்தியாவில்!.
என்ன இல்லை இந்தத் திருநாட்டில்!
பாடலாசிரியர்கள், இசைமேதைகள், கார்டூனிஸ்ட் என யாருக்கு பஞ்சம் இந்தியாவில்!

enRenRum-anbudan.BALA said...

//வலைப்பூக்களிலே தானே சொல்றீங்க அண்ணாச்சி?!
//
மாயூரக் குசும்பு, ம்ம்ம் ....

பாராட்டுக்கு நன்றி, மூர்த்தி.

//ஜார்ஜ் புஷ்ஷை மோசமாக நையாண்டி செய்து திரைப்படமும், பாடலும் கார்ட்டூனும் போட ஏன் முடியாது இந்தியாவில்!. என்ன இல்லை இந்தத் திருநாட்டில்!
//
ஞானபீடம்னு பேர் வைத்துக் கொண்டு ரவுசு பண்றீகளா ;-) உங்கள் நையாண்டியை ரொம்பவே ரசித்தேன்
:)

enRenRum-anbudan.BALA said...

இன்று ஒரு செய்தி பார்த்தேன். மணிப்பூர் தலைநகரான இம்பாலில், முடி திருத்துபவராக வேலை செய்து வந்த அருண் தாக்கூர் என்பவரை புரட்சி மக்கள் முன்னணி என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த சிலர் (இவர்கள் மக்கள் புகையிலை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஓரிரு நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தனர்!), அவர் ஜர்தா பான் மென்று கொண்டிருந்தார் என்பதற்காக துப்பாக்கியால் அவரது கால்களில் சுட்டதில் மருத்துவமனையில் கால்களை அகற்ற வேண்டிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட வன்முறையை செயல்படுத்துபவர்களை என்ன செய்தால் தகும் ?

குழலி / Kuzhali said...

//சகிப்புத்தன்மை, மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்வதில் நேர்மை, ஒரு சாராரின் நம்பிக்கைக்கு புறம்பானவற்றையும் அனுமதிக்கும் பெருந்தன்மை போன்ற பண்புகளை காண்பது அரிதாகி வருகிறது//

மிகச்சரியாக கூறினீர்கள் அரசியல்வாதிகளை படத்துக்கு படம் நையாண்டி செய்து சித்தரிப்பவர்கள், மகாநடிகன் திரைப்படத்திலே நடிகர்களின் வண்டவாளங்களை தண்டவாளத்திலே ஏற்றிய சத்தியராஜ் மீது எகிறி எகிறி குதித்தனர்

//அடுத்து, நம் மக்களிடம் காணப்படும் மற்றொரு (தனித்தன்மையான!) இயல்பு, இறந்து போன மற்றும் வாழ்கின்ற அரசியல் தலைவர்களை கடவுளர்களாக்கி விடுவது. ஒவ்வொரு தலைவருக்கும் நிறைய பக்தகோடிகள் இருக்கிறார்கள்//

இது தான் உங்களிடம் பிடிக்காத விடயம், அட ஓரளவுக்காவது நடுநிலைமையோடு எழுதக்கூடாது, அநியாயத்துக்கு அரசியல்வாதிகளை மட்டும் தாக்குகின்றீர், எனக்கு தெரிந்து அரசியல்வாதியின் படத்துக்கும் கட்-அவுட்டுக்கும் யாரும் கடவுள் அளவுக்கு அவர்களை உயர்த்தி சூடம் காட்டுவதில்லை ஆனாள் கட்-அவுட்டுக்கு பாலபிசேகம், திரையில் தோன்றும் போதெல்லாம் சூடம் காட்டுபவர்களைப்பற்றி எழுத மறந்துவிட்டீரா அல்லது மனமில்லையா?

enRenRum-anbudan.BALA said...

குழலி,
கருத்துக்களுக்கு நன்றி !

// ஆனாள் கட்-அவுட்டுக்கு பாலபிசேகம், திரையில் தோன்றும் போதெல்லாம் சூடம் காட்டுபவர்களைப்பற்றி எழுத மறந்துவிட்டீரா //

நீங்கள் கூறுவதை ஒப்புக் கொள்கிறேன். அதீதமாக எதை செய்தாலும் அது தவறு தான்.

குழலி / Kuzhali said...

கோபித்துக்கோள்ளமாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலே தான் எனக்கு பிடிக்காத விடயம் எது என கூறினேன் தவறாக எண்ண வேண்டாம், நேரடியான விமர்சனம் தான், வேறொன்றுமில்லை, தற்போது உங்களது ப்ளாக்கை படிக்க முடிகின்றது பிராக்ஸி பிரச்சனையில்லை

வீ. எம் said...

// "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று பட்டுக்கோட்டையார் பாடியது தான் நினைவுக்கு வருகிறது !!! //


எந்த அரசியல்வாதியும், இதை திருட்டாக்வே நினைக்கவில்லை..இதை ஒரு தொழிலாகவும், கடமையாகவும் தான் செய்கிறார்கள்..
அப்புறம் எங்கே திருந்துவது.. திருந்த வேண்டும் என்று நினைக்க கூட மாட்டார்கள்.. !

வீ.எம்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails